திராவிட அரசுகள் தேவேந்திர மக்களுக்கு தந்த வலிகள் ...

Latest Post

ரத்த சகதியில் தென் தமிழகம்!

Written By DevendraKural on Saturday, 28 March 2015 | 14:06


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மறுபடியும் ரத்தச் சகதியில் மிதக்கின்றன. கடந்த ஏழு மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் நடந்திருக்கும் கொலைகளின் எண்ணிக்கை 100; தூத்துக்குடியில் 70. ஒவ்வொரு நாளும் கொலையோடுதான் விடிகிறது. தென் தமிழக மாவட்டங்களில் பதற்றநிலை பரவிக்கொண்டிருக்கிறது. 
நடந்திருக்கும் கொலைகளில் சரி பாதிக்குக் காரணம்... சாதி. ஆனால், அந்தக் காரணங்கள் அனைத்தும் மிக அற்பமானவை. நாங்குனேரி அருகே இருக்கிறது பானாங்குளம், கரந்தநேரி ஆகிய இரு கிராமங்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பானாங்குளத்தைச் சேர்ந்த இரண்டு பேர் டி.வி பழுதுபார்க்க கரந்தநேரிக்குச் சென்றுள்ளனர். இருவரும் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றதாகவும், கரந்தநேரியைச் சேர்ந்தவர்கள் இதைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த வாய்த் தகராறு, அடிதடியானது. இரு ஊர்களிலும் வசிப்பது வேறு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தச் சில்லறைத் தகராறு, ஊர்ப் பகையாக மூண்டது. விளைவு... பானாங்குளத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று, ஊர் எல்லையில் உள்ள ரயில்வே கேட் ஓரத்தில் மறைந்துகொண்டு, கரந்தநேரியைச் சேர்ந்த யார் அந்தப் பக்கமாக வந்தாலும் வெட்டியது. வேல்சாமி என்கிற கட்டடத் தொழிலாளி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இரவில் வண்டியில் வீடு திரும்பிய ஜெயப்பிரகாஷை வளைத்துப் பிடித்து வெட்ட... ரத்தம் சொட்டியபடி அவர் தப்பி ஓடினார். கணேசன் என்பவர் வெட்டப்பட்டு கீழே சரிய... அடுத்து வந்த மாரிக்கனி என்பவரைக் கழுத்தை அறுத்துக் கொன்றது அந்தக் கும்பல். அடுத்த நாள் அவரது தலை இல்லாத உடல் ஓர் இடத்திலும், தலை வேறு ஓர் இடத்திலும் கண்டறியப்பட்டன. இப்படியாக இரண்டு பேர் உயிரைப் பறித்து... இரண்டு பேரைக் குற்றுயிராகப் போட்டுச் சென்றார்கள். சில வாரங்கள் கழித்து, இதற்குப் பழிக்குப்பழியாக... பானாங்குளத்தைச் சேர்ந்த கொம்பையா என்பவரின் உணவு விடுதியைச் சூறையாடி... அவரை வெட்டிப் போட்டுவிட்டுச் சென்றது ஒரு கும்பல்.
வள்ளியூர் பக்கம் நம்பியான் விளைக்காரர் டேவிட் ராஜா, ஒரு  பொறியியல் மாணவர். பைக்கில் கல்லூரிக்குச் சென்ற இவரை, பின்னாலேயே இரண்டு வண்டிகளில் துரத்திச் சென்ற கும்பல் மறித்து நிறுத்தி வெட்டிக்கொன்றது. ஏழு பேர் இந்த விவகாரத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலம் பயங்கரம்... 'பள்ளியில் படிக்கும் போதிருந்தே எங்களுக்குள் பிரச்னை. டேவிட் ராஜா நண்பர்களுக்கும் எங்களுக்கும் அடிக்கடி சண்டை வரும். டேவிட் ராஜா எங்கள் பகுதிக்கு வந்து எங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை சைட் அடித்தார். இது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவரை எச்சரித்தபோது, அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து எங்களை அடித்து உதைத்தனர். இதற்குப் பழிவாங்கு வதற்காகத்தான் கொலை செய்தோம்’ என்பது அவர்களின் வாக்குமூலத்தின் சாரம். பள்ளிக்கூட தகராறு படுகொலை வரை போயிருக்கிறது.
உண்மையில் இப்போது நெல்லை, தூத்துக்குடி பகுதியில் நடந்து கொண்டிருப்பவை 'நம்பர் கொலைகள்’. யார் பக்கம் அதிகம் உயிர் சேதம் ஆகிறது என்பதுதான் போட்டி. கொலை செய்பவர்களுக்கும் கொலை செய்யப்படுபவர்களுக்கும் எந்தவிதமான முன்விரோதமோ, முன் அறிமுகமோ கிடையாது. பெயர்கூடத் தெரியாது. குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்; குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற காரணங்களே, கொலை செய்வதற்குப் போதும்.
நாங்குனேரி அருகே ஆடு மேய்க்கும் பெரியவரைக் கொலை செய்தது இப்படித்தான். இப்போது இந்தப் பகுதி கிராம மக்கள், வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் அளவுக்குப் பதற்றமான சூழல். பானாங்குளத்திலும் கரந்தநேரியிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் போலீஸ் பாதுகாப்புடன்தான் தேர்வு எழுதுகின்றனர். திருமணங்கள், போலீஸ் பாதுகாப்புடன்தான் நடைபெறுகின்றன.
காரணமற்ற கொலைகள்!
சாத்தான்குளத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்கிற 56 வயது பெரியவர், ஏதோ வேலையாக தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். தாகமாக இருக்கிறதே என ஒரு வீட்டின் கதவைத் தட்டி, தண்ணீர் கேட்டிருக்கிறார். அவரை திருடன் என நினைத்து வீட்டில் உள்ளவர்கள் அடிக்க, மயங்கிச் சரிந்து மரணம் அடைந்தார். தாகத்துக்குத் தண்ணீர் கேட்டது ஒரு குற்றமா? திருடன் என நினைத்து அடித்தாலும்கூட சாகும் அளவுக்கா அடிப்பார்கள்? அந்தப் பெரியவருக்கும் அடித்தவர்களுக்குமான அறிமுகம் சில நிமிடங்கள்கூட இருக்காது. அவர்களால் இவரது உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. இதைவிடக் கொடூரமானது கீழே உள்ள சம்பவம்.
சங்கரன்கோவில் அருகே உள்ள அழகனேரியைச் சேர்ந்தவர் செல்வா. 25 வயது இளைஞரான இவர், தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர். கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி பேருந்து புறப்பட்டது. அங்கு ஏறிய நான்கு பேர் குடிபோதையில், பேருந்தின் படியில் தொங்கிக்கொண்டு வந்தனர். 'போதையில் கீழே விழுந்து செத்துத் தொலைத்தால், நம்ம உயிரைப் எடுப்பார்களே’ என நினைத்த செல்வா, அவர்களை உள்ளே வருமாறு எச்சரித்தார். அவர்கள் மறுக்க... பேருந்தை நிறுத்தி நான்கு பேரையும் இறக்கிவிட்டுவிட்டுக் கிளம்பினார். இறங்கிய நான்கு பேரும் வெறிகொண்ட நிலையில் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் சென்று பாட்டில் நிறைய பெட்ரோல் வாங்கினார்கள். ஒரு ஆட்டோவைப் பிடித்து பாளையங்கோட்டை பேருந்து நிலையத்துக்குச் சென்றார்கள். அங்கு நடத்துனர் செல்வா, பயணிகளை இறக்கிவிட்டு அடுத்த ட்ரிப் செல்வதற்காக நின்றுகொண்டிருந்தார். அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். பட்டப்பகலில், ஒரு பேருந்து நிலையத்தின் மையத்தில் உடல் எங்கும் தீ பற்றித் துடித்துக் கதறினார் செல்வா. அருகில் இருந்த கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர் என்றாலும் அவரது உடலின் முக்கால்வாசி பகுதி எரிந்துவிட்டது.
இப்படி, இதற்குத்தான் என கணக்கு வழக்கு ஏதும் இல்லாமல், கொலைகள் விழுகின்றன. இப்படி கொலைகள் செய்வோரை, ஊரும் உறவுகளும் கைவிடுவதும் இல்லை; பழிச்சொல் கூறுவதும் இல்லை. மாறாக, அரவணைக்கின்றனர்; பாதுகாக்கின்றனர். பல கொலைகளில் சம்பந்தப்பட்ட சாதிச் சங்கத் தலைவர்கள் உடனடியாக நேரில் வந்து ஆறுதல் சொல்வதன் பெயரால், தூபம் போடுகின்றனர்; குற்றவாளிகளைக் காவல் துறையிடம் இருந்து பாதுகாக்கின்றனர்.
காவல் துறை என்ன செய்கிறது?
எஸ்.பி-யை மாற்றுவது, ஏட்டய்யாவை மாற்றுவது என காவல் துறை தன்னால் முடிந்ததை செய்துதான் பார்க்கிறது. ஆனால், கொலைகள் குறைந்தபாடு இல்லை.
''பல கொலைகளுக்கு, காவல் துறைதான் உடந்தையாக இருக்கிறது. கொலையாளி தன் சாதியைச் சேர்ந்தவன் என்றால், பாதுகாக்கிறது. இந்தப் பகுதியின் காவல் நிலையங்களில் அதிகபட்சம் இருப்பது பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த போலீஸார்தான். அவர்கள் காக்கிச் சட்டை அணிந்திருந்தாலும், உள்ளே சாதி வெறியர்களாகவே இருக்கிறார்கள் அல்லது சாதி வெறியர்களுக்கு சல்யூட் அடிக்கிறார்கள். மேல்நிலை அதிகாரிகளை அடிக்கடி டிரான்ஸ்ஃபர் செய்வதைப்போல, அடிமட்ட காவலர்களையும் அடிக்கடி டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். அப்போதுதான் இது குறையும்'' என்கிறார், மனித உரிமை மீறல்கள் குறித்த இலவசச் சட்ட உதவி மையத்தின் அமைப்பாளரான வழக்குரைஞர் கிரிநிவாச பிரசாத்.
ஓர் ஊரில் சாதிப் பிரச்னை நடக்கிறது என்றால், சம்பந்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அதிகாரியையே அங்கே அனுப்பி நிலைமையைச் சமாளிப்பதை ஒரு டெக்னிக்காக காவல் துறை பின்பற்றுகிறது. முள்ளை முள்ளாலேயே எடுக்கிறார்களாம். சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் சாதிப்பற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் இந்தப் போக்கு, அந்த நேரத்துப் பதற்றத்தைத் தற்காலிமாகத் தணிக்கலாம். ஆனால், அது ஊரின் சாதிப் பகையை இன்னும் இன்னும் இறுக்கமாக்கி, மேலும் மோசமாக்கவே உதவும்.
அதிகரிக்கும் சாதிவெறி
மின்சாரக் கம்பத்தில் அவரவர் சாதிக் கட்சியின் நிறத்தை வரைந்து வைக்கிறார்கள். அதில் அடுத்த தெரு நாய் சிறுநீர் கழித்தாலே, விவகாரமாகி தகராறு, கைகலப்பு, கத்திக்குத்து. பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஃபேஸ்புக்கில் தன் சாதிக்கு எனத் தனித்தனி குழுக்கள் தொடங்கி, அதில் 'ஆண்ட பரம்பரை’ பெருமை பேசுகிறார்கள்; மற்ற சாதியினருக்குச் சவால்விடுகின்றனர். பள்ளிகளுக்கு தன் சாதிக் கட்சியின் நிறத்தில் கயிறு அணிந்து செல்கிறார்கள் மாணவர்கள். கையில் இன்ன நிறக் கயிறு அணிந்தால், அவன் இன்ன சாதிக்காரப் பையன் என அடையாளமாம். அரசியல் ஆட்கள், அவரவர் தலைவர் / தலைவியின் படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்வதுபோல, இது ஓர் அடையாளம்.
''பயங்கர விளைவுகளை, விபரீதங்களை உண்டாக்கும் சாதி உணர்வு, இப்படி பள்ளி - கல்லூரிகளிலேயே வளர்க்கப்படுவது வேதனையானது. சில ஆசிரியர்கள் அவர்கள் செய்யும் தவறுக்காகத் தண்டிக்கப்படும்போது, மாணவர்களை சாதியரீதியில் தூண்டிவிட்டுத் தப்பிக்க முயற்சிக்கிறார்கள். சாதி அடிப்படையில் அணி திரளும் மாணவர்களை சாதிய அமைப்புகள் எளிதாகக் கையில் எடுத்துக்கொள்கின்றன. 'அவ்வளவு பெரிய தலைவர் தன்னிடம் நெருக்கமாக இருக்கிறாரே’ என்கிற மனநிலையில் மாணவர்கள் இதை ஒரு ஹீரோயிசமாக கருதிக்கொள்கின்றனர்'' என்கிறார் வழக்குரைஞர் பிரம்மா.
வீட்டின் நல்லது - கெட்டதுக்கு உள்ளூர் கேபிள் டி.வி-யில் விளம்பரம் தந்தால், அதில், தன் சாதியின் பெருமையைப் பேசும் சினிமா பாடலை ஒலிபரப்புகின்றனர். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பாடல் தேசியகீதம்போல இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு சாதியினரும் தங்கள் வீட்டின் காதுகுத்து, திருமணத்துக்கு போஸ்டர் அடிக்கும்போது, தன் சாதியைச் சேர்ந்த நடிகரின் புகைப்படத்தைத் தவறாமல் அதில் அச்சிடுகின்றனர். இவர்கள் அச்சடிப்பதைப் பார்த்துதான், இன்ன நடிகர் இன்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதே நமக்கு தெரியவரும். அந்த அளவுக்கு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக சாதி பார்க்கின்றனர்.
தீர்வுதான் என்ன?
தென் மாவட்டக் கொலைகளுக்கு, வெறுமனே சட்டம்-ஒழுங்குப் பிரச்னை மட்டும் காரணம் அல்ல; வலுவான சமூகக் காரணங்களும் இருக்கின்றன. அவை வெளிப்படை யாகவும் இருக்கின்றன. இதைத் தீர்க்க, நீண்டகால நோக்கில் உடனடியாகச் செயலாற்ற வேண்டும். பள்ளி - கல்லூரிகள் தொடங்கி, சமூகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து சாதியைத் துண்டிக்கவும் அப்புறப்படுத்தவும் வேண்டும். காவல் துறையின் சாதி அதிகாரிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பாலான கொலைகளில் குற்றவாளிகள் குடிபோதையில் இருப்பதை அவர்களின் வாக்குமூலங்கள் உறுதிப்படுத்து கின்றன. குடிபோதை, ஒரு மனித உயிரை வெட்டிச் சாய்க்கும் இரக்கமின்மையை அவர்களுக்கு வழங்குகிறது. மொத்த மாநிலமும் போதையின் பிடியில் வீழ்ந்து வெட்டிக்கொண்டு சாவதற்கு முன்பு மதுக்கடைகள் என்னும் எமனை மூடுவதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவற்றுக்கு இணை செயல்பாடாக... இந்தப் பகுதியின் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். தென் மாவட்டக் கலவரங்கள் குறித்து ஆய்வுசெய்த நீதிபதி ரத்னவேல் பாண்டியன் கமிஷன், புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதைத் தீர்வாகப் பரிந்துரைத்தது. ஆனால், நாங்குனேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கா இதுவரை அறிவிப்பாகவே இருக்கிறது. கங்கைகொண்டானில் அவசரகதியில் தொடங்கப்பட்ட தொழில்நுட்பப் பூங்காவும் எந்தப் பலனையும் தரவில்லை. தூத்துக்குடியில் திரும்பிய பக்கம் எல்லாம் தொழிற்சாலைகள் இருந்தாலும், அவை உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பைத் தரவில்லை. இந்தச் சூழ்நிலைகள் அனைத்தையும் கருத்தில்கொண்டு, ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் அனைத்துத் திசைகளில் இருந்தும் தீர்வை முன்னெடுக்க வேண்டும்.
சாதியும் வெறுப்பும் நீக்கப்பட்ட நாகரிகமான சமூக வாழ்க்கை, நிம்மதியான அன்றாட வாழ்க்கை... இரண்டும்தான் தென் மாவட்டங்களின் உடனடித் தேவை. இதைச் செய்ய வேண்டியது பொறுப்புள்ள ஓர் அரசின் கடமை!  

பள்ளர் சிறுமிகள் விளையாடும் பாண்டி ஆட்டம் !

Image result for நொண்டி“பாண்டி” என்றால் “பாத்தி” அல்லது “வயல்” என்று பொருள்.பாண்டியர் என்றால் உழவர் என்று பொருள்.பாண்டிய நாடு என்றால் வயல் நாடு என்று பொருள். பாண்டி விளையாட்டு என ஒரு விளையாட்டை பள்ளர் சிறுமிகள் விளையாடுவார்கள். சதுர வடிவிலான பாத்திகளை தாண்டி விளையாடுவதுதான் பாண்டி விளையாட்டு. வயல் வெளிகளில் வரப்புகளில் நெற்கட்டுகளுடன் தாண்டி செல்வதற்காக இளம் வயதிலேயே கொடுக்கப்படும் பயிற்சிதான் பாண்டி விளையாட்டு.

ஆட்டத்துடன் கிண்டலான பாட்டும் எசப்பாட்டுமாக பெண் சுட்டிகளை குதூகலப்படுத்தும் விளையாட்டு, நொண்டி. இதற்கு பாண்டி ஆட்டம் என்றும் பெயர்.
இதை இரண்டு முதல் நான்கு பேர் விளையாடலாம். நொண்டிக்கான கட்டம் போட, தரையில் ஒன்றரை அடி நீளம், மூன்று அடி அகலம்கொண்ட ஆறு கட்டங்கள் கிழிக்க வேண்டும். பிறகு, மண்சட்டி ஓட்டை எடுத்து, ஒரு ரூபாய் நாணயத்தைவிட கொஞ்சம் பெரிதான அளவில் வட்டமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதை, ஒவ்வொருவரும் தனித்தனியாக  வைத்து இருப்பார்கள்.
நொண்டிக் கோட்டின் ஆறாவது கட்டத்தில் சின்னதாக வட்டமிட்டு, முதல் கட்டத்தின் அருகில் இருந்து, ஓட்டை எறிய வேண்டும். வட்டத்துக்குள் யார் ஓடு சரியாக விழுகிறதோ, அவரே முதலில் ஆட்டத்தைத் துவக்குவார். இருவர் சரியாகப் போட்டுவிட்டால், 'ராஜாவா... மட்டியா?’ போட்டு, ஆரம்பிப்பார்கள்.
ஆடுபவர், முதல் கட்டத்தில் ஒட்டைப் போடும்போது, 'ஒண்ணான்’ எனச் சொல்லி, இடது காலைத் தூக்கிக்கொண்டு, வலது காலால் ஓடு உள்ள கட்டத்தைத் தாண்டி, ஆறு கட்டங்களையும் நொண்டி அடித்துப் போக வேண்டும். கட்டங்களில் உள்ள கோடுகளை மிதித்துவிடக் கூடாது. விரல் நுனி பட்டாலும் ஆட்டம் போய்விடும்.
ஆறாவது கட்டத்தைத் தாண்டி வெளியே வந்த பின்பு, இரண்டு கால்களையும் ஊன்றிக் கொள்ளலாம். பிறகு, ஆறாவது கட்டத்தில் இருந்து, ஒன்றாவது கட்டத்துக்கு நொண்டி அடித்து வந்து, ஒண்ணானில் போடப்பட்ட ஓட்டின் மீது, வலது காலால் மிதிக்க வேண்டும். பின்பு, ஓட்டில் இருந்து காலினை நகர்த்தி, ஒரு காலால் குதித்து, ஓட்டை அதே காலில் எகிறித் தள்ள வேண்டும். கட்டத்திற்கு உள்ளே இருந்தபடியே குதித்து, வலது காலால் தள்ளிய ஓட்டினை மிதிக்க வேண்டும். இப்படியாக, ஒண்ணானில் இருந்து ஆறான் வரை ஓட்டினைத் தள்ள வேண்டும்.
அடுத்து, 'மரத்து ஆறான்’ அதாவது, ஆறானில் இருந்து ஓட்டைத் தூக்கிப்போட்டு ஆட வேண்டும். ஆறு கட்டங்களையும் கடந்து வந்துவிட்டால், ஆட்டத்தில் கால்வாசியைக் கடந்ததாக அர்த்தம். அடுத்து, உள்ளங்கையில் ஒட்டைவைத்து, ஆறு கட்டங்களையும் நொண்டி அடித்து, முதல் கட்டத்துக்கு வந்தவுடன், உள்ளங்கை ஓட்டைத் தூக்கிப்போட்டு, புறங்கையில் பிடிக்க வேண்டும். புறங்கையில் ஓட்டினை வைத்துக்கொண்டு, ஆறு கட்டங்களையும் தாண்டி வந்து, முதல் கட்டத்தில் நின்று, ஓட்டை மீண்டும் மேலே தூக்கிவிட்டு, லாகவமாகப் பிடிக்க வேண்டும். இதற்குப் பெயர் சுண்டான். நொண்டி அடிக்கும்போது, தூக்கி வைத்து உள்ள இடது காலைத் தரையில் படாமல், வலது காலின் மீதுவைத்து, சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம். உள்ளங்கையில் இருந்து புறங்கையில் ஓட்டினைப் பிடிக்கும்போது, பெரும்பாலானவர்கள் ஆட்டம் இழப்பார்கள். இதிலுல் வெற்றி பெற்றால், அடுத்து காலான். நொண்டியாகத் தூக்கும் இடது காலின் மேல் பாகத்தில் ஓட்டினைவைத்து, ஒண்ணான் முதல் ஆறான் வரை தாண்டி வந்து, காலில் உள்ள ஓட்டை மேலே தூக்கி, கையால் பிடிக்க வேண்டும்.
இதுபோல் ஒட்டைத் தலையில்வைத்து, ஆறு கட்டங்களையும் நொண்டி வரும் தலையன், கண்களைக் கட்டி நொண்டி அடிக்காமல், நடந்துகொண்டே எறிந்த ஓட்டை மிதிக்கும் சவால், திரும்பி நின்று பின்புறமாக தலையைச் சாய்த்து ஓட்டைத் தூக்கிப் போடும், 'கொடையா பூவா?’ எனப் பல வகைகள் இருக்கின்றன.
சுட்டிகளின் வயது மற்றும் விளையாடும் சாமர்த்தியத்துக்கு ஏற்ப, இதில் ஒரு வகையையோ பல வகைகளிலோ விளையாடுவார்கள். இந்த விளையாட்டில் உடலின் அத்தனை உறுப்புகளும் வேலை செய்யும். ஒரு காலில் உடலின் முழு எடையைத் தூக்கி ஆடும்போது, உடலின் பலத்தையும் திடத்தையும்  தெரிந்துகொள்ளலாம்.  

கொம்பன் சர்ச்சை - தணிக்கை அதிகாரிகளின் பாகுபாடு!


ஏப்ரல் 2ந் தேதி வெளியாகிறது ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் முத்தையா இயக்கியுள்ள கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படம். படம் ‘யு’ சர்டிபிகேட்டுடன் வெளியாவதாகத் சின்னத்திரைகளில் விளம்பரம் வெளியாகிவரும் நிலையில், இப்படத்தால் சாதிரீதியிலான சர்ச்சையும் பதற்றமும் உருவாகும் என புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்தார். 

தணிக்கைக் குழுவினர் இப்படத்தை நிராகரித்துவிட்டதாகவும் எனவே மறுதணிக்கை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், “ஒரு படம் சென்சார் சர்டிபிகேட் பெறாத நிலையில் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாது. அத்துடன் மறுஆய்வு செய்யவேண்டுமென்றால் அதற்கு சில நாட்கள் ஆகும். அதுவும் அலுவலக வேலை நாட்களில் தணிக்கை உறுப்பினர்கள் படத்தைப் பார்ப்பது வழக்கம். 

ஆனால் இதற்கு மாறாக விடுமுறை நாளான ஞாயிறன்று காலையில் கொம்பன் படம் சென்சார் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தின் நெருக்கடி கருதி இப்படிக் கோரியபோது சென்சார் இந்தளவு வேகமாக செயல்பட்டதில்லை.  

ஏற்கனவே அஞ்சான் உள்ளிட்ட தமிழ்ப் படங்களும் பல இந்திப் படங்களும் விதிமீறல்களுடனும் தனிப்பட்ட நலன்கள் கருதியும் சென்சார் செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகும் சென்சார் துறை பாரபட்சமாக செயல்படுகிறது என சினிமா வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். 

தேசம் முழுவதும் பாதிக்கும் அளவுக்கு தணிக்கை குழு மாறியிருப்பது கண்டிக்கத்தக்கது. நீ யார் கண்டிப்பதற்கு என்று கேட்டால், நான் கலைஞன் என்று பதில் சொல்லுவேன் என்று உத்தம வில்லன் திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கொம்பன் பட வட்டாரமோ, மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ள படத்தை வெளியிடுவதற்கு சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்கிறார்கள். தணிக்கை அதிகாரிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்களோ?

10 மாதத்தில் தூத்துக்குடியிலும் நெல்லையிலும் நடந்த படுகொலைகள் நூற்றுக்கும் மேல்!

Written By DevendraKural on Saturday, 21 March 2015 | 06:31

''தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகளை திடீரென மாற்றியிருக்கிறார்களே? என்னவாம்?'
''கடந்த சில மாதங்களில் தூத்துக்குடியிலும் நெல்லையிலும் நடந்த படுகொலைகள் நூற்றுக்கும் மேல்! ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி பாஸ்கர் கொலை விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கிவிட்டது. இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய வி.ஐ.பி-கள் யாரும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரவே பயந்து கிடந்தனர். பாணங்குளத்தில் ஹோட்டல் உரிமையாளர், வள்ளியூரில் கல்லூரி மாணவர், தச்சநல்லூரில் ஆட்டோ டிரைவர் ஆகியோர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியைப் பார்த்தால் அவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் எந்த மோட்டிவும் இல்லை. ஏரியாவில் தங்களைப் பற்றிய பீதி மக்களிடத்தில் இருக்கவேண்டும் என்பதற்காகவே சர்வசாதரணமாய் இந்த அப்பாவிகளைக் கொடூரமான முறையில் கொன்று போட்டுப்போனது தெரியவந்ததாம்!'
''போலீஸ் மீது பயம் போய்விட்டது என்று சொல்லும்!'
''நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் டி.ஐ.ஜி பதவி மற்றும் நெல்லை மாநகர கமிஷனர் பதவி இரண்டையும் சேர்த்து கவனித்து வந்தவர் ஸ்மித் சரண். இந்த மாவட்டங்களில்தான் கொலை சம்பவங்கள் அதிகம் நடந்துகொண்டிருந்தன. ஸ்மித் சரண் பொதுவாக அதிகம் வெளியே தலைகாட்டமாட்டார். இருந்த இடத்தில் இருந்தே கீழ்மட்ட அதிகாரிகள் சொல்வதைக் கேட்டுவந்தார் என்று கூறப்படுகிறது. நெல்லை எஸ்.பியாக இருந்த நரேந்திரன் நாயர், கீழ் மாவட்ட அதிகாரிகளிடம் சரிவர வேலை வாங்கத்தெரியவில்லை என்கிறார்கள். தூத்துக்குடி எஸ்.பி துரை... முக்கியமான பிரச்னைகளில் சரிவர செயல்படவில்லை என்று புகார். இந்த மூவரைப்பற்றி சமீபத்தில் நெல்லைக்கு விசிட் வந்த தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியான ராஜேந்திரனிடம் பத்திரிகையாளர்களே சொல்லி ஆதங்கப்பட்டனர். விரைவில் எல்லாம் சரியாகும் என்று சொல்லிவிட்டு வந்தாராம். அதன் பிறகுதான் அவர்களுக்கு டிரான்ஸ்ஃபர்.!''
''உயர் அதிகாரிகளை மட்டும் மாற்றினால், நிலைமை சரியாகிவிடுமா?'

''உளவுத் துறை ஐ.ஜியான கண்ணப்பன், நெல்லை சரகத்தில் அதிக காலம் பணியில் இருந்தவர். அங்கே நிலவும் பல்ஸ் நன்றாகவே தெரியும். போலீஸ் துறையின் கீழ்மட்டத்தில் இருக்கும் சிலர் சாதி ரீதியாக ஆர்வம் காட்டுவதும்கூட வன்முறைச் சம்பவங்கள் நடக்க ஒரு காரணம். உதாரணத்துக்கு, சமூக ஆர்வலரான ஒரு வக்கீல் வன்முறைச் சம்பவத்தை மேற்கோள்காட்டி, 'அந்த தாதாவின் கையை ஒடிச்சுப்போடுங்க’ என்று சொன்னாராம். அடுத்த சில நாட்களில் அந்த வக்கீலின் நண்பரை சந்தித்த தாதா, 'என் மீது ஏன் இப்படி அவர் கோபத்தை காட்டுகிறார். அவருக்கு நான் என்ன துரோகம் பண்ணினேன்’ என்று அன்பாக எச்சரிக்கை விடுத்தாராம். இதைக் கேட்ட வக்கீல் ஆடிப்போய்விட்டாராம். போலீஸுக்கும் தாதாவுக்கும் எந்த அளவுக்கு நெட்வொர்க் சரியாக இயங்குகிறது என்கிற தகவல் கண்ணப்பனுக்கு உடனே போனதாம். இதையடுத்து, சாதிப் பாசத்துடன் பழகும்  கீழ்மட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் தென் மாவட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என டி.ஜி.பி ஆபீஸ் வட்டாரத்தில் பேச்சு!'

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு: திருமாவளவன்


சென்னை: தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூர் கிராமத்தில் ஊர் திருவிழாவின்போது கோயிலுக்கு சென்றதற்காக அரவிந்தன் என்ற குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஆதிக்கச் சாதிக் கும்பல் ஒன்று அடித்துத் துன்புறுத்தியதோடு, அடிதாங்க முடியாமல் குடிக்கத் தண்ணீர் கேட்ட இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள். இந்த வழக்கில் உள்ளூர் காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இந்த சம்பவம் நடந்து மூன்று வாரங்கள் ஆனபோதிலும், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழான இதை விசாரிக்க வேண்டிய ஊத்தங்கரை டி.எஸ்.பி., பாதிக்கப்பட்ட இளைஞரை சந்திக்கக்கூட இல்லை. அதுமட்டுமின்றி, சிறுநீர் கழித்ததாகச் சொல்லப்படுவது உண்மை இல்லை என அவர் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். இதிலிருந்தே அவர் இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிய வருகிறது.

தற்போது, ஊடகங்களின் மூலம் இந்த கொடூர சம்பவம் வெளி உலகுக்குத் தெரிய வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் மீதே பொய் வழக்கு ஒன்றை போலீஸ் பதிவு செய்திருக்கிறது. இந்தச் சூழலில் இந்த வழக்கை உள்ளூர் காவல்துறை விசாரித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. அதனால், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழகக் காவல்துறை சாதி வெறியர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவே இது. வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்தியிருக்கிறோம். ஆனாலும், தமிழக அரசு இதில் மெத்தனமாகவே இருக்கிறது.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த மனிதத் தன்மையற்ற சம்பவத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள ஓவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். இதனால், இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்பதை தமிழக அரசு உணரவேண்டும். இனியும், குற்றவாளிகளைக் காப்பாற்ற முற்படாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைத்திட இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

மேகதாது அணைக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் 28ல் முழு அடைப்பு!

சென்னை: காவிரியில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 28ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது உள்பட 3 இடங்களில் அணைகள் கட்ட முடிவு செய்துள்ளது. இதை தடுக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரி நதிநீர் பங்கீட்டு குழு அமைக்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் நடைபெற்றது.
இதில், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் பலராமன், பா.ம.க. சார்பில் வேலு, ஜெயராமன், த.மா.கா. சார்பில் ஞானதேசிகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ம.தி.மு.க.வைச் சேர்ந்த மல்லை சத்யா, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பால அருள்செல்வன், மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் டாக்டர் சேதுராமன், தி.க. சார்பில் கலிபூங்குன்றன் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், தமிழ் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நின்றதால் வெற்றி பெற்றோம். அதேபோல் காவிரியில், கர்நாடகம் தடுப்பணைகள் கட்டுவதை தடுக்கவும், அனைத்து  கட்சிகளும் ஒன்றுபட்டு நின்றால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என அனைத்து கட்சியினரும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 28 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், " மத்திய அரசு கர்நாடக அரசின் அணை கட்டுமானப்பணியினை தடுத்து நிறுத்தி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு ஆகிய இரண்டு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளை உடன் உருவாக்கி தமிழகத்தின் விவசாயத்தையும் குடிநீர் ஆதாரத்தையும் உறுதிபடுத்தி காவிரி நீரை பயன்படுத்தும் சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசின் சார்பில் பிரதமர் அவசரகால நடவடிக்கை எடுத்திட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் எதிர்வரும் 28.03.2015 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்றும், அனைத்து கட்சிக்கூட்டத்தின் இந்த முடிவுக்கு தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள், பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆதரவளிக்கவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஒருங்கிணைந்து பாரத பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவது" எனக் கூறப்பட்டுள்ளது.

தென்மாவட்ட கலவரங்கள் பின்னணி....

தென்மாவட்டங்களில் தொடரும் சாதிக் கலவரங்களுக்குக் காரணம் தொழிற்சாலைகளும் வேலைவாய்ப்பும் இல்லாதது தான் என்று தமிழக அரசு அமைத்த பல்வேறு விசாரணைக் கமிஷன்கள் அரசிடம் அறிக்கை கொடுத்திருக்கின்றன. ஆனால், அதைக் களைய இதுவரையில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. 

நீதிபதி கோமதிநாயகம் கமிஷன் 


இதுவரையில், தமிழகத்தில் எத்தனையோ விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டு விட்டன. இந்த கமிஷன்கள் எல்லாம் "சாதிக்கலவரங்கள் எப்படி நடந்தது? எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டார்கள்? யார் யாருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்" என்பதை மட்டும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. "இனிமேல் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?" என்பதையும் சொன்னது. உதாரணமாக, 1995ஆம் ஆண்டு ஜூலை, - ஓகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் தென் மாவட்டங்களில் நிகழ்ந்த தொடர் சாதிக்கலவரங்கள் தொடர்பாக நீதிபதி பி.கோமதிநாயகம் தலைமையில் ஒருநபர் விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. அவரது ஆய்வறிக்கையில், "நாம் சாதியை பின்பற்றுகிற வரையிலும், சாதி உணர்வுகளை ஊட்டித் தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருக்கும் வரையிலும் இத்தகைய கலவரங்களைத் தடுக்கவே இயலாது" என்று சொன்னதுடன், "பொது இடங்களில் சிலைகள் அமைப்பதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். தேவை ஏற்பட்டால் அதனை தடை செய்வது குறித்து சட்டம் இயற்றலாம். தற்போது பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளையும் அகற்றி அருங்காட்சியகம், கோவில் போன்ற இடங்களில் வைக்கலாம்" என்றும் கூறியிருந்தார். ஆனால், அவருடைய முக்கியமான பரிந்துரை இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதித் தலைவர்களின் சிலையைச் சுற்றி கூண்டு அமைத்தார்கள். விருதுநகர் மாவட்டம் குன்னூர் கிராமத்தில் காந்தி சிலையே கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. ஆனால், மதுரை மாவட்டத்தில் இப்போதும் கூட சாதித்தலைவர்களின் சிலைகள் வெட்டவெளியில் பாதுகாப்பின்றி இருக்கின்றன. அதனால், மாதம் ஒருமுறை சாதித்தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதும், பழிக்குப் பழியாக மாற்று சாதித்தலைவரின் சிலை உடைக்கப்படுவதும் இங்கே சகஜமாகிவிட்டது. 

நீதிபதி மோகன் கமிஷன் 

1997ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் தலைமையில் அமைக்கப்பட்ட 3 நபர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு, தென்மாவட்ட சாதிக்கலவரங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை அரசிடம் சமர்ப்பித்தது. "சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கிழக்கு கடற்கரைச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளின் உபரிநீரை, கிழக்கு நோக்கித் திருப்ப வேண்டும். பம்பை ஆற்றை வைகை ஆற்றுடன் இணைக்க வேண்டும். தென்மாவட்டங்களில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளை அதிகரிக்க வேண்டும். அழகர் அணை, ஆவடி அணை போன்ற திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்" என்று நீளமான பட்டியலை அரசிடம் ஒப்படைத்தது. ஆனால், இந்தப் பட்டியலில் கிழக்குக் கடற்கரைச் சாலைத் திட்டத்தைத் தவிர எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆக, சாதிக் கலவரங்களுக்கான அடிப்படைக் காரணமான வேலைவாய்ப்பு இன்மையும், வறுமையும் தென்மாவட்டங்களில் இன்னமும் களையப்படாமலேயே இருக்கிறது. 

நீதிபதி சம்பத் கமிஷன் 


கடந்த 2011ஆம் ஆண்டு பரமக்குடியில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணைக் கமிஷனை அமைத்தது. இந்தக் கமிஷன் அறிக்கை கடந்த 30ஆம் திகதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல கலவரம் எப்படி ஏற்பட்டது? போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தும் சூழ்நிலை எவ்வாறு உருவானது? என்பதை விளக்கிய அந்த ஆய்வறிக்கையில், 60 ஆண்டுகளாக வளர்ச்சியடையாமல் இருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தின் நிலையைப் பற்றியும் விளக்கியிருந்தார் நீதிபதி சம்பத். "60 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சி குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. மாவட்டத்தில் தொழிலகங்களை ஏற்படுத்தி இருந்தால், அங்கு வசிக்கும் மக்களின் மனோநிலையிலும், அடிப்படைக் குணாதிசயங்களிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும். பொருளாதார ரீதியாக வளமாக உள்ள பகுதியில், சமூக அல்லது மத ரீதியிலான வன்முறைகள் பெருமளவு நடைபெறுவதில்லை. அதை மீறி பதற்றமான சூழ்நிலை உருவானாலும் கூட, அது நெடுநாள் நீடிக்கவிடாமல் தற்காத்துக் கொள்ளும்" என்று கூறியிருந்தார். 

இந்த விசாரணைக் கமிஷன் அறிக்கையின் பெரும்பகுதி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது என்றாலும் கூட, மேலே கூறிய கருத்துக்களை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள். பொதுவாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணைக் கமிஷன்கள் ஆளும்கட்சிக்கு ஆதரவாகத் தான் இருக்கும் என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆனாலும் கூட, அந்தக் கமிஷன் அறிக்கையை சம்பந்தப்பட்ட ஆளும் கட்சிகள் முழுமையாக நிறைவேற்றுவது இல்லை என்பது கடந்த கால வரலாறு. இன்றைய தமிழக அரசாவது, நீதிபதி சம்பத் கமிஷன் கூறியுள்ள கருத்தை ஏற்று, ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக மக்களை மேம்படுத்த முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. அதேபோல, முந்தைய கமிஷன்கள் சொன்ன வளர்ச்சித்திட்டங்களிலும் தமிழக அரசு கவனம் செலுத்தினால், சாதிப் பிரச்னைகளை ஒழித்து, பின்தங்கிய நிலையில் உள்ள தென்மாவட்டங்களை முன்னேறிய மாவட்டங்களாக மாற்ற முடியும்

இப்போது இல்லையென்றால் எப்போதுமில்லை !

Written By DevendraKural on Sunday, 15 February 2015 | 11:44

2195237_ambedkar_periyar

சமூக சமநிலை, பொருளாதார சமநிலை என்று இருக்க வேண்டிய நமது அரசியல், கெடுவாய்ப்பாக வெகுமக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் தத்தமது   பொருளாதாரத் தேவைகளை மட்டுமே நோக்கியதாக அமைத்துக் கொள்ளப்படுகிறது, அமைந்துவிடுகிறது. அதிகாரவர்க்கம் இவர்களை அத்தேவைகளை நோக்கிய ஓட்டத்திலிருந்து விலகிவிடாமல் இருக்க அனைத்தையும் செய்துகொண்டே இருக்கிறது. இந்துத்துவமும், பார்ப்பனியமும் எக்காரணங்களுக்காக இம்மண்ணிலிருந்து விரட்டியடிக்கபட்டதோ, அக்காரணங்களும் அச்சமூகப் புரட்சியின் தேவையும் இன்னும் நீடிக்கும் நிலையில், இதோ அதே இந்துத்துவமும், பார்ப்பனியமும் அரசியல் இயக்கமாக, காவியும் காக்கியுமாக பரிவாரங்களுடன் அணிவகுத்து பெரியார் மண்ணைக் கொள்ளை கொள்ள வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றில் பல நெருக்கடிகளை நாம் கடந்து வந்திருந்தாலும் இப்பொது இந்துத்துவ ஆக்கிரமிப்பு வடிவில் நாம் சந்தித்துக் கொண்டிருப்பது மீண்டு வர இயலாத ஒரு நெருக்கடி. இதிலிருந்து மீள்வது என்பது நமக்கான அரசியலை நாம் மீட்டெடுப்பதாகவே அமையும்.

பலநூறு ஆண்டுகளாய் புரையோடிய, அழுகிய ஆறாப் புண்ணாகிய, இந்துத்துவத்தின் மூலக்கூறுகளான, சாதியையும் அதன் படிநிலைகளையும் காயங்களூடே அறுத்தெறிந்த பெரியாரையும், அம்பேத்கரையும் நினைவில் நிறுத்துவதும்,அவர்களின் அரசியலை முன்னெடுப்பதுமே பாசிச ஆற்றல்களுக்கு எதிரான நமது வெற்றியாக அமையும். இந்தியாவின் விடுதலைக்குப் பின்னான ஐம்பது ஆண்டுகளில் இவர்களிருவரின் அயராத உழைப்பும், ஓயாத போராட்டமும் தான் நம்மை நமதுப் பொருளாதார, சமூக வாழ்வில் வெற்றியடைய வைத்திருக்கிறது. அதன் பலனே வெள்ளையர்களுக்குப் பின் அனைத்து அரச அதிகாரங்களிலும், ஆட்சி அலுவலகங்களிலும் இருந்த பார்ப்பனர்களின்விகிதம் குறைந்து, பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், சிறுபான்மையினர்களும் அந்த இடங்களை நிரப்ப முடிந்தது.
இன்று இந்த மூன்றாவது தலைமுறையானது பகட்டான உடையுடன் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களுக்குச் செல்வது அப்போரட்டத்தின் எச்சமே. நாம் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதும், நமது இவ்வெற்றிக்காக தம் வாழ்நாள் முழுவதும்உழைத்த அண்ணலையும், பெரியாரையும் மறப்பதும் ஒன்றே. அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படவேண்டிய பெரியார் அரசியலின் தேவை இன்னும் இருப்பதை மறுக்கயியலாது. காரணம் அவரின் சமூகப் புரட்சியை நாம் நமது பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக மட்டும் தன்னல நோக்குடன் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து நமது சாதிய அடுக்கு நிலைகளைப் பற்றிக்கொண்டும், ஆதிக்கச் சாதியாய் பெருமைப்பட்டுக் கொண்டும் (அமெரிக்கா, ஐரோப்பாவிற்குச் சென்று வந்தாலும் ஆண்ட சாதியாகவும், ஆதிக்கச்சாதியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களை த.தொ.அலுவலகங்களில் காணமுடியும்) இருப்பது, நாம் இந்த இருவரையும் தோல்வியுறச் செய்கிறோம் என்பதைத் தற்திறனாய்வோடு ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தோல்வி அவர்களின் கொள்கைக்கானதல்ல, நமது இருப்புக்கானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு “நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு அடிமை யாருமில்லை” என்ற அண்ணலின் வாக்கு நினைவு கூறத்தக்கது. எந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் இழிநிலையை மறுக்கக்கோரி மூத்திரப்பையோடு இறுதி மூச்சுவரை பெரியார் போராடினாரோ, அவர்களே இன்று தங்கள் சாதியை மறுப்பதற்குப் பதிலாய் மறைத்துக்கொண்டு, சமூகப் புரட்சியின் பலனாய்த் தமது பொருளாதார நிலையை மேம்படுத்த மட்டும் எதைப் பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் ஓடிகொண்டிருக்கின்றார்கள்.
sanskitpolicy
இப்பொழுதும் நாம் தன்ன்ல நோக்கோடு சாதியைத் தூக்கிகொண்டோ, இவர்கள் கொள்கைகளைப் புரிந்துகொள்ளாது மறுத்துவிட்டோ, மறந்துவிட்டோ கடந்து செல்வோமானால் நமது இருப்பு வினாக்குறியாக்கப்படும். குறிப்பாக இடைநிலைச்சாதியான பிற்படுத்தப்பட்ட (பெரும்பான்மை) மக்களிடம் “வளர்ச்சி, வளர்ச்சி” என்றும் “ஊழல், ஊழல்” என்றும் “மாற்று அரசியல்” என்றும் கூவிக்கொண்டு காவிகள் ஊடுருவுவதைக் காணமுடிகிறது. ஊழல் மிகுந்த திராவிட இயக்கங்களுக்கு மாற்று பாசிச இந்துத்துவா அரசியல் அல்ல என்பதை நாம் தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும். பார்ப்பன, இந்துத்துவ நலம்பேணும் பா.ச.க. வெறும் காற்று ஊதப்பட்ட காற்றுப்பையாகப் பெருத்து, வளர்ச்சிக்கான எந்த மாற்றுத்திட்டங்களும் இல்லாது வெறும் இந்து, இந்தி, இந்தியா என்று நமக்கு எதிரானக் கருத்துகளைக் கூறி அவற்றை நமது பேசுபொருளாக்கி, திரைமறைவில் உலக முதலாளிகளின் கைக்கூலிகளாக அவர்களுக்கான அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறது.
 ஊழல் மிகுந்த காங்கிரசின் மாற்று தாங்கள் தான் என்று சொல்லிக்கொண்டு ஆட்சியைப் பிடித்த பா.ச.க. அரசு, காங்கிரசு ஆட்சியில் தாம் எதிர்த்த, மக்கள் நலனுக்கு எதிரான அனைத்துத் திட்டங்களையும் கடந்த ஆறு திங்களாக திணித்துக் கொண்டிருக்கிறது. வரும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் வளர்ச்சி எனும் மாயையைக் (காவியை) கரியாக நம் கைகளில் திணித்து நம் முகங்களில் பூசிக்கொள்ளத் தூண்டி,பின்னாலிருந்து பல்லிளிக்கிறது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான பண்பாட்டு வளர்ச்சியில் சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சார்பான அரசியல் முன்னெடுக்கப்பட்டது. அதுவே  காங்கிரசு, மற்ற அனைத்து இந்திய கட்சிகளின் கொள்கையாக இருந்தது. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் சிறுபான்மையினர் நலத்தை முதன்மையாகக் கொண்டு இயங்கியது (பின்னாளில் வாக்கு அரசியலாக மாறிவிட்டது). நம் குடும்பத்திலோ, நண்பர்களிலோ ஒருவர் உடல்நலம் குன்றியோ, வலிமை குறைந்தவராகவோ இருக்கும் போது அவரது பணிகளை நாம் பகிர்ந்தோ, அவரது வேலைப் பளுவைக் குறைத்தோ நாம் உதவி செய்வோம், இதுதான் இயற்கையான உளநிலை. இப்படித்தான் நாம் சிறுபான்மையினர் நலத்தைப் பண்பாட்டுடன் கையாள்கிறோம். ஆனால் தன்னைத் தூய்மையின் வடிவமாக முன்னிறுத்திக்கொள்கிற இந்துத்துவம், இயற்கைக்கு எதிரானபண்பாடற்ற முறையில் சிறுபான்மையினர் நலத்தைப் புறந்தள்ளுகிறது. இன்று ‘இந்தியா இந்துகளுக்கான நாடு’ என்று பெரும்பான்மைவாத அரசியல் பேசி சிறுபான்மையினர் மீதான வெறுப்பரசியலை வளர்கிறது.
சிங்கள பௌத்தப் பேரினவாதம் எப்படி சிங்களப் பெரும்பான்மை மக்களிடையே தமிழர்கள் மீதான வெறுப்பரசியலை இனவெறியாக வளர்த்தெடுத்து இனவழிப்பை நிகழ்த்தியதோ, அதே வகையான இனவழிப்பை குசராத்தில் இந்த்துத்துவம் செய்ததை நாம் கண்டோம், தமிழகத்திலும் இப்படியான வெறுப்பரசியலின் முன்னோட்டத்தை தர்மபுரியில் கண்டோம். பா.ச.க.வின் மதவாதத்தை ஏற்றுகொண்ட தமிழக சாதியக் கட்சிகள், அதன் ஆளும் அதிகாரத் துணையுடன் எதையும் செய்ய ஆயத்தமாக உள்ளன. அதன் முதல் படிதான் திராவிட அரசியல் காலவதியானது என்பதும், தேவையற்றது என்பதும். இப்படியான இக்கட்டான சூழலில் நாம் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராகவும்,அம்பேத்கரை வெறும் தலித் தலைவராகவும் முன்னிறுத்தும் கயமைகளை வீழ்த்தி, நமக்கான இவர்களின் போராட்டங்களை நினைவில் நிறுத்தி சிந்தித்தாலொழிய நம்மால் நமக்கான அரசியலையும் சமூக உரிமையையும் வென்றெடுக்க முடியாது.
எப்போதும் இல்லாத வீரியத்துடன் இந்துத்துவமும், பார்ப்பனியமும் தமிழகத்தில் காலூன்ற முயன்று கொண்டிருகிறது என்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும். ஏனென்றால் இப்பொது இல்லையேன்றால், நாம் மீண்டு வர எப்போது வாய்ப்பு கிட்டும் என்று சொல்வதற்கில்லை.
—–தோழர்.கிருபாகரன் – இளந்தமிழகம் இயக்கம்

மருதமலை முருகனும் மருத மரமும்..

Written By DevendraKural on Thursday, 1 January 2015 | 14:44

                 ஞ்ச பூதக் கலவை யின் மொத்த உருவமே மனிதன். மனிதனை பஞ்ச பூதங்களின் பரிணாமம் என்றுகூட சொல்லலாம். பஞ்ச பூதங்களின் சேர்க்கை யினால் உண்டாகும் இந்த உடம்பு, பல்வேறு எண்ணக் குவியல்களைக் கொண்டு, அதாவது- ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சோகம், பாராட்டு, இன்பம், துன்பம், தூக்கம், பசி, காதல், கல்யாணம், முறிவு, நட்பு, பகை, பயம், சந்தோஷம் போன்ற பல்வேறு குணாம்சங்க ளைக் கொண்டு மானுட வாழ்வு சுழன்று கொண்டிருக்கிறது.

நாம் எடுக்கும் பிறவிப் பலாபலன்களுக்கேற்ப நாம் வாழ்வோம். மரணிப்போம். மறுபடியும் பிறப்போம். இந்த பஞ்சபூதச் சக்கரம் ஓய்வின்றி சுழன்று கொண்டேதான் இருக்கும்.

பிறவியெடுத்த மானுடரின் கோபம், அகங்காரம், கர்வம் போன்ற தேவையற்ற குணங்களை இறைவன் விரும்புவதில்லை. இத்தகைய முரண்பட்ட விளைவுகளால்தான் நமது கர்மா தொடருகிறது. நமது மறுஜென் மமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மகாபாரதப் போரில் பகவான் கிருஷ்ணரின் பேருதவியினாலேயே பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. மாவீரன் அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மாவே வந்து தேரோட்டி வழி நடத்தி வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் போருக்குப்பின் அர்ஜுனன் மனம் சாதாரணமாகச் செயல்படத் தொடங்கி விட்டது.

போர் முடிந்ததும், தேரோட்டியான கிருஷ்ண பகவான் தன் கரங்களைப் பிடித்துத் தன்னைக் கீழே இறக்க வேண்டும் என்று அர்ஜுனன் கர்வம் கொண்டிருந்தான். ஆனால் கிருஷ்ணரின் கட்டளையோ வேறாக இருந்தது.

""போர் முடிந்து விட்டது. இனி என்ன தயக்கம்? அர்ஜுனா! தேரை விட்டு கீழே இறங்கு'' என்று கிருஷ்ணர் கட்டளையிட்டார்.

வெற்றிபெற்ற தன்னை தனக்குத் தேரோட் டிய கிருஷ்ண பரமாத்மாவே கைகளைப் பற்றிக் கீழே இறக்க வேண்டும் என்ற அர்ஜுனனின் கர்வத்தை அறிந்த இறைவன்,""அர்ஜுனா! உன் கர்வத்தை விலக்கு. நான் இட்ட கட்டளையை உடனடியாகச் செய்'' என்று அழுத்திச் சொல்ல, அர்ஜுனனும் கீழிறங்க, அடுத்த நொடியே தேர் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட அர்ஜுனன் திகைத்து நின்றான்.

கிருஷ்ணன் புன்முறுவல் பூத்துச் சொல் கிறார்: ""அர்ஜுனா! பயம் வேண்டாம். வேண்டாத கர்வத்தை விட்டுவிடு. நான் உன்னைக் கீழே இறக்கிவிட வேண்டும் என்று நீ எண்ணினாய். வெற்றி வரும்பொழுதுதான் மனிதனுக்குப் பணிவு அவசியம் என்பதை முதலில் உணர்ந்து கொள். பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியர், துரியோதனன் போன்றோர் இட்ட அம்புக் கணைகள் நம் தேரில் குத்திட்டு நிற்கின்றன. அந்த அம்புகள் அனைத்தும் மந்திர சக்திகள் நிறைந்தவை. நான் தேரை விட்டு இறங்கியவுடன் கொடியில் இருக்கும் அனுமனும் போய்விடுவான். அப்பொழுது மந்திர சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும். பின் உன் கதி அதோகதிதான். அதனால்தான் உடனே தேரை விட்டு இறங்கச் சொன்னேன்.''

கிருஷ்ணரின் விளக்கத்தைக் கேட்ட அர்ஜுனன் அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். கர்வம் கொள்பவனே மனிதன். நமது எண்ணங்களும், நமது எண்ணங்களை ஒட்டி உண்டாகும் கோப- தாபங்களும், கர்வம், அகங்காரம் போன்றவையே நமக்கு உண்டாகும் நோய்களுக்குக் காரணமாகும்.

நோய்களே மரணத்திற்குக் காரணமாகும். மரணமே பிறவிக்குக் காரணமாகும். இது சுழன்று கொண்டேதான் இருக்கும். மானுடனை வழிநடத்தும் மகத்தான சக்தியாகிய இறைவன், மரங்களிலும் செடி, கொடி, புல், பூண்டுகளிலும் உறைந்திருந்து, நமது நோய்களை நீக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் மருத மரத்தில் குடிகொண்டிருக்கும் இறைவன் அருளால் என்னென்ன நோய்களிலிருந்து மீளலாம் என்பதை இனி காண்போம்.

மானுட உடம்பில் உண்டாகும் ஒட்டுமொத்த நோய்களையும் களையும் வல்லமை பெற்றது மருத மரமேயாகும். வாத, பித்த, கப நோய்களை முற்றிலும் நீக்கி, ஆரோக்கியத்துடன் கூடிய ஒரு மேம்பட்ட வாழ்க்கையை நமக்கு மருத மரம் வழங்கி வருகிறது.

ரத்தக் கொதிப்பு நீங்க...

ரத்த அழுத்தமே (இல்) இரத்தக் கொதிப்பு எனப் படுகிறது. ஒருமுறை ரத்த அழுத்த நோய்க்கு ஆட்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுக்க இந்நோய் நம்முள் இருந்துகொண்டேதான் இருக்கும். ரத்த அழுத்தத்தை ஒரே சீராய் வைத்துக் கொள்ள மருத மரம் நமக்கு வழிகாட்டுகிறது.

மருதமரப் பட்டை 200 கிராம், சீரகம் 100 கிராம், சோம்பு 100 கிராம், மஞ்சள் 100 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்யவும். இதை காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டுவர, ரத்த அழுத் தம் இருந்த சுவடே இல்லாமல் மறையும்.

மன உளைச்சல், தூக்கமின்மை விலக...

மருதமரப் பட்டை, வில்வம், துளசி ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து அரைத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, மன உளைச்சல், படபடப்பு, தேவையில்லாத பயம், ஆவேசம், தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் தானே மறையும்.

சர்க்கரை நோய் குணமாக...

மருதமரப் பட்டை, ஆவாரம்பட்டை வகைக்கு 200 கிராம். சுக்கு, ஏலக்காய் வகைக்கு 20 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவு எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரிலிட்டு கசாயமிட்டு காலை, இரவு என இருவேளையும் காபிக்குப் பதிலாகச் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் குணமாகும்.

சர்க்கரை நோய் குணமாக மற்றொரு மருந்து கூறுகிறேன்.

மருதமரப் பட்டை, ஆலம்பட்டை, அரசம் பட்டை, கருவேலம் பட்டை, ஆவாரம் பட்டை, பருத்திக் கொட்டை, கடல் அழிஞ்சில், நாவல் பட்டை, நாவல் கொட்டை, கருஞ்சீரகம் ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்கு முன்பாகச் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் வெகுவாகக் கட்டுப்படும். சர்க்கரை நோயினால் உண்டாகும் உடல் பலவீனம், அதிக தாகம், அதிமூத்திரம் போன்ற கோளாறுகளும் உடனே தீரும்.

இதயநோய் குணமாக...

இதய நோய்களை மிக எளிதில் குணமாக்கும் வல்லமை மருத மரத்திற்கு உண்டு. இதய நோய்களுக்கு உண்டு வரும் நவீன மருந்துகளுடன், மருதம் சார்ந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரலாம். மருத மரம் வீரியமான ரசாயனமல்ல என்பதை உணர்ந்து கொண்டீர்களானால் கண்டிப்பாகச் சாப்பிடத் தயங்கமாட்டீர்கள்.

மருதம்பட்டை, தாமரைப்பூ வகைக்கு 200 கிராம். ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கப் பட்டை வகைக்கு 20 கிராம். இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, இதய பலவீனம், இதயத்தில் உண்டாகும் வலி, இதய வீக்கம், இதயக் குழாய் களில் உண்டாகும் அடைப்பு போன்றவை அதிசயமாய் நீங்கும்.

மேற்சொன்ன மருந்தையே கசாயமிட்டும் சாப்பிட்டு வரலாம். கடைகளில் கிடைக்கும் மருத மரம் சார்ந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கலாம். நம் பண்டைய ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படும் "அர்ஜுனா அரிஸ்டம்' என்ற திரவ மருந்து மருந்துக் கடைகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இதில் 20 மி.லி. அளவு காலை, இரவு என இருவேளையும் சாப்பிட்டு வர, இதய நோய்கள், ரத்தம் சார்ந்த நோய்கள் உடனே தீரும்.

ரத்த மூலம் தீர...

மருத மர இலையை ஐந்து எண்ணிக்கையில் எடுத்து அரைத்து, கட்டித் தயிரில் கலக்கிச் சாப்பிட்டுவர, மூன்று தினங்களில் ரத்தப் போக்கு நிற்கும்.

மாதவிலக்கை முறைப்படுத்த... 

மருத மர இலையைக் காயவைத்துத் தூள் செய்து, தினசரி ஐந்து கிராம் அளவில் இருவேளை யும் சாப்பிட்டுவர, பெண்களுக்கு உண்டாகும் மாதாந்திர சுழற்சி முறையாகும்.

மாதவிலக்கில் உண்டாகும் வயிற்றுவலி தீர...

மருதம்பட்டை, வேப்பம்பட்டை வகைக்கு 100 கிராம், பெருங்காயம் 10 கிராம் சேர்த்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு, காலை, இரவு என இருவேளையும் ஒரு டம்ளர் மோருடன் சாப்பிட்டுவர, மாதவிலக்கின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகும்.

மேலும் மருத மரத்தினால் வெள்ளைப்படுதல், உஷ்ண நோய்கள், பித்த நோய்கள், சரும நோய் கள், பற்களைச் சார்ந்த நோய்கள் அனைத்தும் தீரும்.

மருதமலை முருகனும் மருத மரமும்...

மருதமலை முருகனின் அம்சம் மற்றும் பேரருள் பெற்ற மூலிகையே மருத மரமாகும். மருத மலையில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை ஒருமுறையேனும் தரிசித்து வாருங்கள். குன்றுகள் தோறும் குமரன் இருக்கும் இடம்தான் என்றாலும், மருத மரத்தை தல விருட்சமாய்க் கொண்டுள்ள மருதமலை முருகனை மண்டியிட்டு வேண்டி வாருங்கள். எம்பெருமான் முருகப் பெருமான் உங்கள் சகல கஷ்டங்களையும் கவலைகளையும் தீர்த்து, முப்பிணியை நீக்கி எப்பிணியும் வராமல் இப்பிறவி முழுவதும் காப்பான். வாழ்க வளமுடன்!
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
powered by தேசம்